- காலை 10 மணிக்கு மேல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
- தேங்கிய மழைநீரை ராட்சத மோட்டார்கள் மூலம் உடனுக்குடன் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த ஃபெஞ்சல் புயலானது இன்று பிற்பகலில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. அப்போது 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று சுழன்று வீசுவதுடன், அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்றிரவு முதல் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலையில் இருந்து கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது. காலை 10 மணிக்கு மேல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரதான சாலையான ராதாகிருஷ்ணன் சாலை, தண்டையார்பேட்டை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் தேங்கிய மழைநீரை ராட்சத மோட்டார்கள் மூலம் உடனுக்குடன் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். மேலும் பலத்த காற்றினால் அசோக் பில்லர் பிரதான சாலையில் விழுந்த மரத்தை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.