மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை- ஊத்து, நாலுமுக்கு எஸ்டேட்டுகளில் தலா 8 செ.மீ. மழை பதிவு
- நாலுமுக்கு பகுதியில் இன்று காலையில் பனிமூட்டத்துடன் ரம்மியமான சூழ்நிலை நிலவியது.
- அணைகளை பொறுத்த வரை பாபநசாம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரம் அடையவில்லை. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.
இதன் காரணமாக விவசாயிகளும் நெல் நடவு பணியை தொடங்குவதில் தாமதம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பரவலாக மழை பெய்தது.
நெல்லையில் சில நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று பிற்பகலில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சில இடங்களில் இடி-மின்னலுடன் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. நாலுமுக்கு பகுதியில் இன்று காலையில் பனிமூட்டத்துடன் ரம்மியமான சூழ்நிலை நிலவியது. இன்று காலை நிலவரப்படி நாலுமுக்கில் 8.2 சென்டிமீட்டரும், ஊத்து பகுதியில் 8 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 7.2 சென்டி மீட்டரும், மாஞ்சோலையில் 6.7 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
அணைகளை பொறுத்தவரை பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மணிமுத்தாறில் 28 மில்லிமீடடரும், சேர்வலாறில் 21 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 200 கனஅடியாக அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 405 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்காக வினாடிக்கு 1,204 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கொடுமுடியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை கொட்டியது. 52.50 அடி கொண்ட அந்த அணை நீர்மட்டம் 31.25 அடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 96.70 அடியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 84.65 அடி நீர் இருப்பு உள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு சேர்வலாறு அணை நீர்மட்டம் 110 அடியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு இன்று 86.45 அடியாக குறைந்துள்ளது.
மாவட்டத்தில் பணகுடி, களக்காடு, ஏர்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதையொட்டி மின்தடையும் ஏற்பட்டது. குறிப்பாக ஏர்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பிசான சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை வெயில் அடித்தது. அதன் பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நெல்லை ஐகிரவுண்டு, மேலப்பாளையம், தியாகராஜ நகர், மகாராஜ நகர் பகுதியில் மாலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் மழைநீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நின்றது. நெல்லை வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், சந்திப்பு பகுதியில் சாரல் மழை பெய்தது.
இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக நெல்லை மாவட்டத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் லேசான மழை பெய்துள்ளது. அங்கு 1 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இன்று காலையில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது. மாவட்டத்தில் மழைபொழிவு இல்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை முதலே பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் காலை 7.30 மணி முதல் சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாநகரில் முத்தையாபுரம், பிரையண்ட் நகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே அங்கும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், காலை முதல் மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.