புதிய பாம்பன் பாலத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆய்வு
- கடந்த 17-ந்தேதி ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
- புதிய பாலத்தை சரக்கு ரெயில் கடந்து சென்றது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சுமார் 2 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மையப் பகுதியில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான திறந்து மூடும் தூக்குப்பாலம் உள்ளது.
இந்த நிலையில், புதிய பாம்பன் பாலத்தில் கடந்த 17-ந்தேதி ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரை 14 பெட்டிகளுடன் சரக்கு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது 90 கி.மீ. வேகத்தில் புதிய பாலத்தை சரக்கு ரெயில் கடந்து சென்றது.
இந்த நிலையில், புதிய பாம்பன் பாலத்தில் நடைபெற்று வரும் பணிகளை தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.எம்.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த புதிய பாலத்தில் வரும் நவம்பர் மாதத்திற்குள், மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.