ரெயில் பாதையில் மண்சரிவு- ஊட்டி மலை ரெயில் நாளை வரை ரத்து
- பாறாங்கற்கள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன.
- ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், பர்லியாறு, கோவை மாவட்டம் கல்லாறு, மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் பாதையில் கல்லாறு-ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது.
பாறாங்கற்கள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன. மண் சரிந்து தண்டவாளத்தை மூடியது. மரங்கள் வேரோடு சாய்ந்து தண்டவாளத்தின் குறுக்கே விழுந்தன.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே மலைரெயில் சேவையை சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று ரத்து செய்தது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் மலைரெயில் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதற்கிடையே ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஆனால் பணியை உடனடியாக முடிக்க முடியவில்லை. இதனால் இன்று(திங்கட்கிழமை), நாளை(செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு மலைரெயில் இயங்காது என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
சீரமைப்பு பணி முடிவடைந்த பிறகு மீண்டும் மலைரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.