தமிழ்நாடு

எல்.ஐ.சி. வலைதளம் மூலம் இந்தி திணிப்பு - காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்

Published On 2024-11-19 15:52 GMT   |   Update On 2024-11-19 15:52 GMT
  • எல்.ஐ.சி. இணையதள முகப்பில் இந்தி மொழி திணிக்கப் பட்டிருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
  • பிரதமர் மோடி இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட வேண்டும்.

எல்.ஐ.சி. இணையதளத்தின் முகப்பு பக்கம் முழுவதும் இந்தி மொழியில் மாறியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், வலைதளத்தின் மொழியை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. பலர் வலைதள மொழியை ஆங்கிலத்திற்கு மாற்ற முடியாததால் அவதியுற்றனர்.

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.-யின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் ஆங்கிலம் மொழியை தேர்வு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாவதால் உடனடியாக சீர் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

எல்.ஐ.சி. வலைதளத்தின் முகப்பு பக்கம் இந்தி மொழியில் காட்சியளித்ததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு இந்தி, சமஸ்கிருத திணிப்பு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சிகளுக்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆயுள் காப்பீட்டுக் கழக இணைய தள முகப்பை இந்தி மயமாக்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். ஏற்கனவே, ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம், அஞ்சல்துறை, தகவல் தொடர்புத்துறை, ரயில்வே துறை என அனைத்து துறைகளிலும் இந்தி திணிப்பு நடைபெற்று வருவதை கடுமையாக எதிர்த்து வருகிறோம்.

இந்தி பேசாத மக்களுக்கு, இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேரு அவர்கள் கொடுத்த உறுதிமொழிக்கும், அதனைத் தொடர்ந்து பிறகு பிரதமராக வந்த லால்பகதூர் சாஸ்திரி, அன்னை இந்திரா காந்தி ஆகியோர் ஆட்சிமொழிச் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தின் மூலமாகவும் இந்தி பேசாத மக்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதையெல்லாம் மீறுகிற வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் இணையதள முகப்பில் இந்தி மொழி திணிக்கப்பட்டிருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதுபோன்ற முயற்சிகளை தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய இந்தி திணிப்பு முயற்சிகளை கடுமையாக கண்டிக்கிறேன்.

எனவே, பிரதமர் மோடி இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு இந்தி திணிப்பை தடுக்கின்ற வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News