தமிழ்நாடு

மணிப்பூர் இனக்கலவரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் - ஈபிஎஸ் வலியுறுத்தல்

Published On 2024-11-19 13:26 GMT   |   Update On 2024-11-19 13:26 GMT
  • மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து அமைதியின்மை நிலவுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
  • மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி இன மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் தங்களுக்கு பழங்குடியின மக்கள் என்ற அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.

இதற்கு மணிப்பூரில் வாழும் பாரம்பரிய குகி பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு இன மக்களுக்கும் சிறு சிறு மோதல்கள் நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.

இந்த வன்முறையில் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் கடந்த 11-ந்தேதி மீண்டும் வன்முறை வெடித்தது. அன்று இரவு குகி பழங்குடியினத்தை சேர்ந்த 10 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இதையடுத்து குகி பழங்குடியின மக்கள் ஆத்திரம் அடைந்து தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மணிப்பூரில் நடைபெறும் இனக்கலவரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து இனக் கலவரம் அதிகரித்து பொது சொத்துக்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் வீடுகளுக்கு தீ வைப்பது, இரு சமூகத்தினருக்கு இடையே பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த நேற்று (18.11.2024) மத்திய அரசு கூடுதலாக 50 கம்பெனிகள் மத்திய படையை அனுப்பியுள்ளது.

புதிய அரசு பதவியேற்றப் பிறகும் மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து அமைதியின்மை நிலவுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இரு பிரிவினருக்கு இடையே தொடர்ந்து கலவரம் நடப்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிரும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

2008-2009ம் ஆண்டுகளில் இலங்கையில் நமது தொப்புள்கொடி உறவான தமிழர்கள் மீது இனப்படுகொலை தாக்குதல் நடத்தப்பட்டபோது, அப்போதைய மத்திய, மாநில அரசுகள் அமைதியாக வேடிக்கைப் பார்த்தது. அதுபோல் இல்லாமல், தற்போது மணிப்பூரில் நடைபெறும் இனக்கலவரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை இனியும் காலம் தாழ்த்தாமல் எடுத்து மக்களையும், ஜனநாயகத்தையும் காப்பற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News