தமிழ்நாடு

சிக்கன் ரைஸ் காரணமல்ல.. கூடைப்பந்து வீராங்கனை மரணத்தில் திடீர் திருப்பம்

Published On 2024-11-19 14:56 GMT   |   Update On 2024-11-19 14:56 GMT
  • எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
  • எலினாவுக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

கோவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபின் டென்னிஸ் (வயது 40). இவருடைய மகள் எலினா லாரெட் (15). கூடைப்பந்து வீராங்கனையான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இதற்கிடையே பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெற்றது.

இந்த போட்டிகளில் விளையாடுவதற்காக எலினா லாரெட், சக மாணவிகளுடன் ரெயிலில் மத்திய பிரதேசம் சென்றார். பின்னர் போட்டியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை வந்தார்.

ரெயில் பயணத்தில் மாணவி எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து ரெயிலில் வைத்து சிக்கன் ரைஸ் மற்றும் பர்க்கர் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக எலினா லாரெட் சென்னை அண்ணாநகரில் உள்ள தனது உறவினர் டேவிட் வில்லியம்சிடம் கூறியுள்ளார். அவர், ரெயில் சென்னை வந்ததும் எலினாவை அண்ணாநகர் 4-வது அவென்யூவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். சிகிச்சைக்கு பின்னர் எலினா, பெரவள்ளூரில் உள்ள தனது மற்றொரு உறவினர் வீட்டுக்கு சென்றார்.

அங்கு சென்ற சிறிது நேரத்தில் எலினாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவருடைய உறவினர்கள் அவரை மீட்டு பெரவள்ளூரில் உள்ள பெரியார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் எலினாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் எலினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கோவையைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை எலினா லாரெட் (15), உயிரிழந்ததற்கு சிக்கன் ரைஸ் காரணமல்ல என விசாரணைகுப் பிறகு போலீசார் தெரிவித்துள்ளனர்.

கூடைப்பந்து விளையாட்டின் போது வயிற்று மற்றும் மார்புப் பகுதியில் சதை கிழிந்துள்ளது. இதனால், நுரையீரல் செயலிழந்து மரணம் நிகழ்ந்துள்ளது என்று அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News