தமிழ்நாடு (Tamil Nadu)

பருவமழை முன்னேற்பாடுகளை சரிவர மேற்கொள்ளாததால் வெள்ள பாதிப்பு- பொதுமக்கள் குற்றச்சாட்டு

Published On 2024-10-26 07:22 GMT   |   Update On 2024-10-26 07:22 GMT
  • செல்லூர் கண்மாய், ஆத்திக்குளம், புளியங்குளம் கண்மாய்கள் தூர்வாரப்படவில்லை.
  • குடும்பத்துடன் முகாம்களில் தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நட

வடிக்கையாக கால்வாய்கள் தூர்வாருதல், கண்மாய் கரைகளை பலப்படுத்துதல், வெள்ளம் பாதிக்கும் பகுதிகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றன.

ஆனால் மதுரை மாவட்டத்தில் பருவகால முன்னேற்பாடு பணிகளுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளது.

இதுகுறித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையை தவிர்த்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இதையடுத்து அங்கு பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் அதனை பார்த்தாவது மதுரையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கலாம். ஆனால் மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருந்தது.

கடந்த காலங்களில் மதுரை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கனமழை பெய்தபோது கண்மாய்கள், கால்வாய்கள் நிரம்பி தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. அப்போதே அதிகாரிகள் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று வெள்ள பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.

செல்லூர் கண்மாய், ஆத்திக்குளம், புளியங்குளம் கண்மாய்கள் தூர்வாரப்படவில்லை. இதனால் குறைந்த நேரத்தில் பெய்தமழையால் தண்ணீர் நிரம்பி குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. நகரில் உள்ள கால்வாய்களும் தூர்வாரப்படவில்லை. இதனால் மழைநீர் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் தடைபட்டது.

குறிப்பாக செல்லூர் கண்மாய் மற்றும் அங்கிருந்து வைகை ஆற்றுக்கு தண்ணீர் செல்லும் முக்கிய கால்வாயான பந்தல்குடி கால்வாய் தூர்வாரப்படாததால் குப்பை கூளமாகவும், செடிகொடி மரங்கள் வளர்ந்தும் காணப்பட்டது. மழை தொடங்கி தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்த பின்னரே மாநகராட்சி அதிகாரிகள் அவசர அவசரமாக குப்பைகளை அகற்றுதல் போன்ற தற்காலிக பணிகளை மட்டும் மேற்கொண்டனர்.

நேற்று பெய்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து உள்ளன. இதனால் எங்களுக்கு பொருளாதார ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

செல்லூர், அய்யர் பங்களா, முல்லை நகர், கூடல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வெள்ள நீர் புகுவதற்கு முக்கிய காரணமாகி விட்டது. மழை காலம் தொடங்குவதற்குள் சில மணி நேரம் கால்வாய்களை தூர்வாரி இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. இப்போது குடும்பத்துடன் முகாம்களில் தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News