தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழ்நாடு வேளாண் துறையில் முன்னணி மாநிலம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் உயர்ந்தது

Published On 2024-10-27 07:24 GMT   |   Update On 2024-10-27 07:24 GMT
  • 113 விவசாயிகளுக்கு கரும்பு அறுவடை எந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.
  • சர்க்கரை ஆலைகளுக்கு வழி வகைக் கடனாக 600 கோடி ரூபாயை வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொலை நோக்குத் திட்டமாக முதல் முறையாக தமிழ்நாட்டில்தான் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வேளாண் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டுக்குப் பின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் 29 லட்சத்து 34 ஆயிரம் விவசாயிகளுக்கு 5,148 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாண்டுகளில் மழை, வறட்சி ஆகிய பேரிடர்களால் 19.84 லட்சம் ஏக்கர் நிலங்களில் பாதிக்கப்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு மொத்தம் 833.88 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு 11.95 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

தோட்டக்கலைப் பயிர்கள் பாதிப்புகளுக்கு மட்டும் 1,19,519 விவசாயிகளுக்கு 91 கோடியே 7 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாண்டுகளில் கரும்பு உற்பத்தி ஊக்கத் தொகை மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையாக 624 கோடி ரூபாய் 4 லட்சத்து 44 ஆயிரத்து 857 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 113 விவசாயிகளுக்கு கரும்பு அறுவடை எந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. சர்க்கரை ஆலைகளுக்கு வழி வகைக் கடனாக 600 கோடி ரூபாயை வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

விவசாயிகளுக்கு 4,104 டிராக்டர்கள், 10,814 பவர் டில்லர்கள், 332 அறுவடை இயந்திரங்கள், 28,140 பிற விவசாயக் கருவிகள் உட்பட மொத்தம் 43,390 வேளாண் பொறியியல் கருவிகள் ரூ.335.16 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.

முதன் முறையாக ஆதி திராவிடர்-பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் அமைக்க 56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

27.5 கோடி ரூபாய் செலவில் 100 உழவர் சந்தைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 14 புதிய உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, நாகை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 13 கோடியே 40 லட்சம் ரூபாய்ச் செலவில் விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு வளாகம் ஏற்படுத்தப்பட்டு விவசாயிகள் பயனடைகின்றனர்.

திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய 2021-2022 முதலாண்டிலேயே உணவு தானிய உற்பத்தி முந்தைய ஆண்டைவிட 11 சதவீதம்-11.74 லட்சம் மெட்ரிக் டன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறுவை நெல்சாகுபடியில் 48 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக 5.59 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உற்பத்தி அதிகரித்து விவசாயிகள் பயனடைந்தனர். ரூ.14.94 கோடி செலவில் 1,75,052 விவசாயிகளுக்குத் தார்ப்பாய்கள் வழங்கப்பட்டன.

கம்பு, கேழ்வரகு, வரகு, தினை, குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானியப் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.29 கோடியில் சிறு தானிய இயக்கம் செயல்படுத்தப்பட்டு 2,99,725 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

திராவிட மாடல் அரசினால் ரூ.39.77 கோடி செலவில் 2,33,701 விவசாயிகளுக்கு வேளாண் கருவித் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் 44 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இப்படிப் பல்வேறு திட்டங்களின் மூலம் சிறப்பான முன்னேற்றங்கள் கண்டு பல விருதுகளைப் பெற்றுள்ளது வேளாண்துறை. சென்னை மாநகரின் மையப் பகுதியில் கதீட்ரல் சாலையில் பொது மக்களுக்குப் புத்துணர்வை அளிக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்காவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இப்பூங்கா தமிழ்நாட்டிற்கே ஒரு புதிய அணிகலனாக விளங்கி அனைவரையும் கவர்ந்துள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத் துறை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கும் உணவுப் பொருள்களை வழங்கி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News