தமிழ்நாடு (Tamil Nadu)

மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிதாமதம்: பயிர் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு- ராமதாஸ் குற்றச்சாட்டு

Published On 2024-10-27 08:25 GMT   |   Update On 2024-10-27 08:25 GMT
  • உழவர்களின் வாழ்வாதாரமாக திகழும் மதுராந்தகம் ஏரியை தூர்வாரி, சீரமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
  • வரும் ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சோழர் காலத்தில் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நான்காண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவடைய வில்லை.

சீரமைப்புப் பணிகளால் கடந்த நான்காண்டுகளாக பயிர் சாகுபடி செய்யமுடியாமல் பெரும் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், இதுகுறித்த அக்கறையும், கவலையும் சிறிதும் இல்லாமல் ஏரி சீரமைப்புப் பணிகளை தமிழக அரசின் நீர்வளத்துறை தமதப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

மதுராந்தகம் ஏரி சீரமைப்புப் பணிகள் தாமதமாவதால், வேளாண்மை மட்டுமின்றி குடிநீர் வழங்கலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மதுராந்தகம் ஏரியை நம்பி முப்போகம் சாகுபடி செய்து வந்த விவசாயிகள், வாழ்வாதாரத்தையும் இழந்து, குடிநீருக்கும் திண்டாடும் நிலைமை இனியும் தொடர அனுமதிக்கக்கூடாது.

பல்லாயிரக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரமாக திகழும் மதுராந்தகம் ஏரியை தூர்வாரி, சீரமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். வரும் ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பாண்டையும் சேர்த்து தொடர்ந்து 4 ஆண்டுகளாக மதுராந்தகம் ஏரி பாசன நிலங்களில் சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதாலும், வயல்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டியிருப்பதாலும் ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.25,000 வீதம் நான்காண்டுகளுக்கு சேர்த்து ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வீதம் உழவர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News