தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் 20-ந்தேதி நடக்கிறது
- உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
- கழக ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.
சென்னை:
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து உள்ளார்.
7-வது முறையாக மீண்டும் தி.மு.க. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றி வருகிறார். இதற்காக 234 சட்டசபை தொகுதிகளிலும் தொகுதி வாரியாக தி.மு.க. தொகுதி பார்வையாளர்களை நியமித்துள்ளார்.
இவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் நடைபெறும் கட்சிப் பணிகள் குறித்தும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் குறித்தும் விசாரித்து தலைமைக்கு தகவல் அனுப்பி விடுகின்றனர்.
சட்டசபை பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ளதால் (15 மாதம்) கட்சிப் பணிகளை வேகப்படுத்துவதற்காகவும் ஆலோசனைகள் வழங்குவதற்காகவும் தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழுக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20-ந்தேதி கூட்டி உள்ளார்.
இதுகுறித்து பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும்.
அப்போது உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கழக ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இந்த குழுவில் முதலமைச்சருடன், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட 5 துணைப் பொதுச்செயலாளர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், பழனி மாணிக்கம், பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட 27 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.