சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை... 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை
- புரசைவாக்கம், வேப்பேரி, பட்டினம்பாக்கம், மந்தைவெளி, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று காலையும் கோடம்பாக்கம், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், வடபழனி, புரசைவாக்கம், வேப்பேரி, பட்டினம்பாக்கம், மந்தைவெளி, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
பொன்னேரி, செங்குன்றத்தில் தலா 3 செ.மீ, பூண்டி, திருத்தணி, ஊத்துக்கோட்டை, பூவிருந்தவல்லியில் தலா 2 செ.மீ மழை பதிவு.
ஆர்.கே.பேட்டை, ஆவடி, சோழவரம், திருவாலங்காடு, திருவள்ளூர், தாமரைப்பாக்கம், ஜமீன் கொரட்டூரில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.