தமிழ்நாடு

வானில் ஓர் அதிசயம்: கண்களுக்கு விருந்து படைத்த இரட்டை வானவில்

Published On 2024-11-15 02:07 GMT   |   Update On 2024-11-15 02:07 GMT
  • வானவில் என்பது மழை பெய்வதற்கு முன்னும், பின்னும் காலை மற்றும் மாலை நேரங்களில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும்.
  • இரட்டை வானவில் என்பது, ஒளியானது மழைத்துளியினுள் நுழைந்து வெளியேறும் முன்பு 2 முறை பிரதிபலிப்படையும்போது தோன்றுகிறது.

சென்னை:

நீல வானம்.. அண்ணாந்து பார்த்து கண்களை ஓடவிடும் கவிஞர்களுக்கு கவிதைகள் படைக்கும் மைதானமாக விளங்கி வருகிறது. கவிஞர் வைரமுத்து தான் எழுதிய முதல் பாடலான "இது ஒரு பொன்மாலை பொழுது.." பாடல் வரிகளிலேயே, "வானம் எனக்கொரு போதிமரம். நாளும் எனக்கது சேதி தரும்" என்று சிலாகித்து இருப்பார்.

நீல வானில், இரவு நேரத்தில் நிலா, நட்சத்திர கூட்டங்கள் அலங்கரித்தாலும், பகல் நேரத்தில் பஞ்சு போன்ற வெண் மேகக் கூட்டங்கள் மட்டுமே காட்சி அளிக்கும். ஆனால், எப்போதாவது தோன்றும் வானவில், வானில் வர்ணஜாலம் காட்டி கண்களுக்கு விருந்து படைப்பது பார்ப்பவர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தும். அதுவே, இரட்டை வானவில்லாக தோன்றினால், இரட்டை சந்தோஷம்தான். அப்படியொரு காட்சி நேற்று மாலை சென்னையில் தோன்றி மக்களின் கண்களுக்கு விருந்து படைத்தது.

பொதுவாக வானவில் என்பது மழை பெய்வதற்கு முன்னும், பின்னும் காலை மற்றும் மாலை நேரங்களில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும். அதாவது, காலையில் மேற்கு திசையிலும், மாலையில் கிழக்கிலும் தோன்றும். நண்பகல் நேரத்தில் வானவில் தோன்றாது.

இனி வானவில் எப்படி தோன்றுகிறது என்பதை பற்றி பார்ப்போம். சூரிய ஒளியானது காற்றில் உள்ள மழைத்துளிகளில் பட்டு ஒளிவிலகல், எதிரொளிப்பு மற்றும் ஒளிச் சிதறல் ஆகிய இயற்பியல் மாற்றங்களுக்கு உள்ளாகி 7 வண்ணங்களாக (ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு) வில்போல் வளைந்து வானவில்லாக தோன்றுகிறது.

இரட்டை வானவில் என்பது, ஒளியானது மழைத்துளியினுள் நுழைந்து வெளியேறும் முன்பு 2 முறை பிரதிபலிப்படையும்போது தோன்றுகிறது. இரட்டை வானவில் தோன்றும்போது இரண்டாவது வானவில்லில் ஊதா நிறம் வெளியேயும், சிவப்பு நிறம் உட்புறமாகவும் இருக்கும்.

அப்படியொரு காட்சியைத்தான் நேற்று சென்னைவாசிகள் தூறிய சாரல் மழைக்கும், மிதமான வெயிலுக்கும் இடையே வானில் கண்டு ரசித்து பரவசம் அடைந்தார்கள்.

இதற்கு முன்பு சென்னையில் இரட்டை வானவில் கடந்த மே 16, ஜூன் 10 ஆகிய தேதிகளிலும், கோவையில் ஜூன் 8-ந் தேதியும், பெங்களூருவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதியும் இதேபோல் தோன்றியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News