கந்த சஷ்டி விழா... திருச்செந்தூரில் ஆய்வு செய்த கனிமொழி எம்.பி.
- இந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரை கந்தசஷ்டி விழா நடைபெற உள்ளது.
- பக்தர்களின் வசதிக்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் ஸ்தலத்தில் தான், முருகப் பெருமான் சூரனை வதம் செய்து தேவர்களை காத்ததுடன், தன்னை நோக்கி தவம் செய்த குரு பகவானுக்கும் காட்சி அளித்தார் என்பதால் கந்த சஷ்டி விழாவிற்குரிய தலமாக திருச்செந்தூர் கருதப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் கந்தசஷ்டி விழாவும், சூரசம்ஹாரமும் நடைபெற்றாலும், திருச்செந்தூர் நடைபெறும் சூரசம்ஹாரத்தை காணவே லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் கூடுவது வழக்கம்.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரை கந்தசஷ்டி விழா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 7-ந்தேதியும், முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம் 8-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்திற்கு வருகை தர உள்ளனர். இதனால் பக்தர்களின் வசதிக்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.
பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட கூடாரம், சூரசம்ஹாரம் நடைபெற உள்ள இடங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் ஆய்வாளர் அஜய் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, கோவில் தக்கார் அருள்முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.