பயிர் சாகுபடியை அளவீடு செய்வதற்கு வேளாண் கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்துவது வேதனைக்குரிய செயல்- ஓபிஎஸ்
- வருவாய்த்துறையினருக்கு ஊக்கத் தொகை கொடுக்க இயலவில்லை என்று தி.மு.க. அரசு கூறுவது மிகவும் வேதனைக்குரிய செயலாகும்.
- பணியிலிருந்து வேளாண் கல்லூரி மாணவ, மாணவியரை விடுவிக்கவும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஒருங்கிணைந்த வேளாண் திட்டங்களை வகுக்க ஏதுவாக, மாநிலத்தில் உள்ள நிலங்களின் தன்மை, அளவு, பயிர் வகைகள், விவசாயிகளின் வருமானம், கடன், காப்பீடு போன்ற விவரங்களை மின்னணு முறையில் தொகுத்தளிக்க மத்திய அரசு கோரியிருந்த நிலையில், இந்தப் பணிகளை வருவாய்த் துறை மூலம் தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், கடந்த ஒரு வார காலமாக, மேற்படி பணியை நாமக்கல், கடலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் வேளாண் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் மாநில அரசின் வரம்பிற்குட்பட்ட அனைத்து வரிகளும் பன்மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், வருவாய்த் துறையினருக்கு ஊக்கத் தொகை கொடுக்க இயலவில்லை என்று தி.மு.க. அரசு கூறுவது மிகவும் வேதனைக்குரிய செயலாகும்.
எனவே, பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை வருவாய்த் துறை மூலம் மேற்கொள்ளவும், மேற்படி பணியிலிருந்து வேளாண் கல்லூரி மாணவ, மாணவியரை விடுவிக்கவும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.