இன்று 47-வது பிறந்தநாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்
- தனது பெற்றோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- துர்காவை சந்தித்து ஆசி பெற்றார்.
- தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற உள்ளார்.
தி.மு.க. இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். இதையொட்டி காலையில் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு அவர் சென்றார்.
அங்கு தனது தந்தையான முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க. கரை வேட்டியை அணிவித்து வாழ்த்து பெற்றார். பதிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதயநிதிக்கு சால்வை அணிவித்து தோளில் கை போட்டு அரவணைத்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது தாயார் துர்கா ஸ்டாலினிடமும் உதயநிதி காலில் விழுந்து ஆசி பெற்றார். அவரை துர்கா ஸ்டாலின் உச்சி முகர்ந்து வாழ்த்தினார். அப்போது கேக் கொண்டு வரப்பட்டு குடும்பத்தார் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் கேக் வெட்டினார்.
அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரை சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதே வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், தயாநிதி மாறன் எம்.பி., மேயர் பிரியா, மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், தாயகம் கவி, எழிலரசன், பகுதி செயலாளர் சேப்பாக்கம் மதன் மோகன், புழல் நாராயணன் கலைஞரின் உதவியாளர் நித்யா, பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன், சேப்பாக்கம் பகுதி ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் பி.கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் சென்று மரியாதை செலுத்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அங்கு உதயநிதி ஸ்டாலினுக்கு கழக நிர்வாகிகள் மாலைகள்-புத்தகங்கள் வழங்கினர்.
அதன் பிறகு அங்கிருந்து பெரியார் திடலுக்கு சென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அங்கு அவருக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் ரோட்டின் இரு புறமும் நின்று உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பெரியார் திடலுக்குள் திராவிட கழக தலைவர் கி.வீரமணி புத்தகம் வழங்கி வாழ்த்து கூறினார். ஏராளமான கட்சி நிர்வாகிகளும் வாழ்த்தினார்கள். அதன் பிறகு கோபாலபுரம் சென்று கலைஞரின் உருவப்படத்துக்கு மலர் தூவி வணங்கினார். தயாளு அம்மாள் மற்றும் குடும்பத்தாரிடமும் ஆசி பெற்றார்.
பின்னர் சி.ஐ.டி. காலனிக்கு சென்று ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.