தமிழ்நாடு

பேசுபவர்கள் பேசட்டும்... யாரையும் 'தரம் தாழ்ந்து' விமர்சனம் செய்யக்கூடாது- நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு

Published On 2024-11-13 05:00 GMT   |   Update On 2024-11-13 05:00 GMT
  • எக்காரணம் கொண்டும் யாரும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடக் கூடாது.
  • எதிர்தரப்பினர் தரம் தாழ்ந்து பேசினாலும் அவர்களுடன் நம் கட்சியினர் மல்லுக்கட்ட கூடாது.

சென்னை:

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு, செயற்குழுக் கூட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து கட்சியின் வளர்ச்சி மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் கட்சி தலைவர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதைத் தொடர்ந்து பூத் கமிட்டி மற்றும் வாக்காளர் சேர்த்தல், திருத்தல் முகாமில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் விஜய் அறிக்கை வாயிலாக வலியுறுத்தி இருக்கிறார்.

மேலும் கட்சி வளர்ச்சிக்காக அடுத்தடுத்து அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் பல்வேறு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் விவாத பொருளாக இருந்து வருகிறது.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 'விஜய்' அரசியல் பயணம் பற்றி கடுமையாக சமீபத்தில் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் கடந்த 8-ந்தேதி சீமான் பிறந்த நாளையொட்டி அவருக்கு விஜய் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் விஜய் ஆலோசனையின் பேரில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசியதாவது:-

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விவாதங்களில் பங்கேற்போர் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள கட்சி தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளார். எக்காரணம் கொண்டும் யாரும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடக் கூடாது. எதிர்தரப்பினர் தரம் தாழ்ந்து பேசினாலும் அவர்களுடன் நம் கட்சியினர் மல்லுக்கட்ட கூடாது. நெறியாளர்களிடம் எடுத்துரைத்து நமது விவாதங்களை புரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்த வேண்டும்.

விவாதங்களில் பங்கேற்க செல்பவர்கள் பொறுமை, சகிப்புத்தன்மை, நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தரவுகளின் அடிப்படையில் பதில் அளிக்க வேண்டும். தரக்குறைவான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்யக் கூடாது.

பேசுபவர்கள் பேசிவிட்டு போகட்டும். மற்றக் கட்சி நிர்வாகிகளை எக்காரணம் கொண்டும் மரியாதை குறைவாக பேசக்கூடாது. கட்சி கொள்கை, கொடி விளக்கம், கட்சியின் பெயர் காரணங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பதில் அளிக்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை உள்வாங்கி கருத்தியல் வாயிலாக விவாதித்து மிளிர செய்ய வேண்டும். தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் எப்போதும் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு புஸ்சி ஆனந்த் பேசினார்.

கட்சி தலைவர் விஜய் வலியுறுத்தலின் பேரில் நிர்வாகிகளுக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News