நாளை முதல் 4 நாட்களுக்கு தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
- 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பணிகளை தீவிரப்படுத்த 120 மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.
- தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளிடம் விஜய் நேர்காணல் நடத்த உள்ளார்.
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளை தொடங்கி உள்ளார். கட்சி தொடங்கி ஓர் ஆண்டு நிறைவு பெற உள்ள நிலையில் 2026-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலை சந்திப்பதற்கு தயாராகவும் தொடங்கி இருக்கிறார்.
சமீபத்தில் சென்னை அருகே பரந்தூர் விமான நிலைய பிரச்சனை தொடர்பாக விவசாயிகளை சந்தித்து பேசிய அவர் தனது அரசியல் பயணம் புத்துணர்ச்சியுடன் தொடங்கி விட்டதாக அறிவித்தார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற வகையில் பொறுப்பாளர்களை நியமனம் செய்ய நடிகர் விஜய் முடிவு செய்தார். இதற்காக கடந்த சில மாதங்களாக அவர் 234 தொகுதிகளுக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணியை செய்து வந்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி பணிகளை செய்வதற்கு என்று மாவட்ட செயலாளர் தலைமையில் வலுவான அணியையும் அவர் உருவாக்கி வருகிறார். ஒவ்வொரு மாவட்ட செயலாளர் தலைமையில் இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணை செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட கட்சிப் பணிகளை மேற்கொள்வார்கள்.
இந்த அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வாகி வருகிறார்கள். 120 மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஒன்றியம், நகரம் மற்றும் கிராம அளவில் கிளை அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு முடித்ததும் விஜய் கட்சியில் மாநிலம் முழுவதும் சுமார் 3.5 லட்சம் நிர்வாகிகள் களப்பணியாற்றுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
234 சட்டசபை தொகுதிகளுக்கும் பணிகளை தீவிரப்படுத்த 120 மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். அதில் முதல் கட்டமாக நடிகர் விஜய் நேற்று தமிழக வெற்றிக்கழகத்துக்கு புதிதாக 19 மாவட்ட செயலாளர்களை அறிவித்தார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்த உள்ளார்.
நாளை முதல் 4 நாட்களுக்கு கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொள்கிறார். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளிடம் விஜய் நேர்காணல் நடத்த உள்ளார்.