சர்வதேச மாணவர்கள், பட்டதாரிகளை வெளியேற்றுவதாக செய்தி: உண்மை இதுதான் என்கிறார் கனடா மந்திரி
- இந்திய அரசு, மாணவர்கள் தொடர்ந்து படிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
- மாணவர்களுக்கு தொடர்பு இல்லை என்றால் கனடாவில் தங்கியிருக்க அனுமதி
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கனடாவில் படித்து வருகின்றனர். பட்டதாரியான பிறகு அங்கேயே குடியேற விண்ணப்பித்தும் வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து கனடாவிற்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதற்கிடையே மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்போது பெரும்பாலான மாணவர்களுடைய ஆவணங்கள் போலியானவை எனத் தெரியவந்தது. போலியான தகவல் அளிக்கப்பட்டு கனடா வந்துள்ள மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என கனடா அரசு அறிவித்தது.
இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நிலை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசு மாணவர்கள் தொடர்ந்து படிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற செய்தி உண்மையல்ல என கனடா நாட்டின் குடிவரவுத்துறை மந்திரி சீன் பிராசர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து அவர் குறிப்பிட்டிருப்பதாவது:-
வெளிநாட்டு மாணவர்கள் தங்களுடைய படிப்பிற்கான அனுமதி விண்ணப்பங்களை சமர்பிக்க கேட்டிருந்த நிலையில், அது போலியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற செய்தி வெளியாகிய வண்ணம் உள்ளது.
ஆனால் நான் ஒன்றை உறுதிப்படுத்த விரும்புகிறேன். வெளிநாட்டு மாணவர்கள் போலி ஆவணம் தாக்கல் செய்ததில் தொடர்பு இல்லை என்றால் அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்.
தனிப்பட்ட ஒரு மாணவரை எடுத்துக் கொண்டால், அவர் படிக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடு கனடா வந்து, அவருடைய விண்ணப்பம் போலியானது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்றால், தற்காலிகமாக அவர் தங்குவதற்கு அனுமதி வழங்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். இது சிறந்த நோக்கத்தோடு வந்துள்ள சர்வதேச மாணவர்கள், பட்டதாரிகள் கனடாவில் தங்கியிருக்க உறுதி செய்யும். அவர்கள் கனடாவிற்கு ஐந்து வருடம் வருவதற்கு தடை என்பதில் வரமாட்டார்கள்'' எனத்தெரிவித்துள்ளார்.