இந்தோனேசியாவில் சோகம் - கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலி
- இந்தோனேசியாவில் கடலில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்தனர்.
- அதிகமான பாரத்தை ஏற்றிச்சென்றதாலேயே விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ரியாவில் உள்ள இந்திரகிரி ஹிலிர் என்ற துறைமுக பகுதியில் இருந்து ரியாவ் தீவின் தலைநகரான தஞ்சோங் பினாங்குக்கு பயணிகள் படகு ஒன்று புறப்பட்டது. இதில் 80-க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர். இந்தப் படகு புளாவ் புருங் என்ற இடத்தின் அருகிலுள்ள கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தைகள், பெண்கள் என 58 பேரை மீட்டனர்.
திடீரென ஏற்பட்ட விபத்தால் 11 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். மேலும் 10 பேர் மாயமாகினர். எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
முதல் கட்ட விசாரணையில், அதிகமான பாரத்தை ஏற்றிச்சென்றதாலேயே விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.