உலகம்

இலங்கையில் கனமழை எதிரொலி- 15 பேர் உயிரிழப்பு

Published On 2024-06-02 16:02 GMT   |   Update On 2024-06-02 16:02 GMT
  • 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைபதிவாகி உள்ளது.
  • இலங்கை முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.

இலங்கையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. 4 மாவட்டங்களுக்கு நிலச்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை தலைநகர் கொழும்பு உட்பட 7 மாவட்டங்களில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சுமார் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைபதிவாகி உள்ளது. மொத்தம் உள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

4000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மீட்புப் பணிகளுக்காக படகுகளுடன் கூடிய 7 குழுக்களை இலங்கை ராணுவம் அனுப்பி உள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி அவசர நடவடிக்கைக்காக விமானப்படை 3 ஹெலிகாப்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளது. மழை நீடிக்கும் என்பதால், இலங்கை முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News