இதுவரை 15 லட்சம் பேர்... ஹஜ் பயணிகளால் நிரம்பி வழியும் மெக்கா...
- மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது.
- பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் இருந்து 4,200 பாலஸ்தீனியர்கள் சவூதி அரேபியா சென்றுள்ளனர்.
மெக்கா:
முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.
ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து இதுவரை 15 லட்சம் பேர் மெக்காவில் குவிந்துள்ளனர். இதனால் மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இதுகுறித்து சவூதி அரேபிய அதிகாரிகள் கூறும்போது, கடந்த 11-ந்தேதி வரை 15 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவுக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு 18 லட்சம் பேர் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டனர். அதைவிட இந்த ஆண்டு யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். புனித யாத்திரை நாளை அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளது என்றனர்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின்ஹமாஸ் அமைப்புக்கு இடையே 8 மாதங்களாக நீடித்து வரும் போர் காரணமாக, காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள முடியவில்லை. அதேவேளையில் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் இருந்து 4,200 பாலஸ்தீனியர்கள் சவூதி அரேபியா சென்றுள்ளனர்.