பேருந்தும் டிரக்கும் நேருக்கு நேர் மோதல்: 19 பேர் உயிரிழப்பு
- பயணிகளை ஏற்றி சென்ற இரட்டை அடுக்கு பேருந்து எலோடாவில் விரைந்து சென்றது
- இந்த விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது
நேற்று, வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டின் ஜலிஸ்கோ மாநிலத்தில் உள்ள குவாடலஜாரா (Guadalajara) பகுதியில் இருந்து சினலோவா மாநில லாஸ் மாசிஸ் (Los Mochis) பகுதிக்கு சுமார் 50 பயணிகளை ஏற்றி கொண்டு ஒரு இரட்டை அடுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்பேருந்து வடமேற்கு மெக்சிகோவில் எலோடா முனிசிபாலிட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த ஒரு டிரக்கின் மீது நேருக்கு நேராக மோதியது.
இதில் அந்த பேருந்து அங்கேயே தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்; 22 பேர் காயமடைந்தனர்.
எரிந்த நிலையில் உள்ள சடலங்களை பணியாளர்கள் அப்புறப்படுத்தி அடையாளம் காணும் பணியை செய்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
அதிக வேகம், மோசமான வாகனங்கள், ஓட்டுனரின் அலட்சியம் மற்றும் பயண களைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மெக்சிகோவின் தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட பல சாலைகளில் அடிக்கடி பேருந்து விபத்துகள் நடப்பது குறிப்பிடத்தக்கது.