வேதியியல் நோபல் பரிசு: 3 நேனோ தொழில்நுட்ப சாதனையாளர்கள் வென்றனர்
- 5 துறைகளிலும் சாதனை புரிந்தவர்களுக்கு வருடா வருடம் வழங்கப்படுகிறது
- மூவரும் குவான்டம் டாட்ஸ் துறையில் வெற்றிகரமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்
சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் எனும் வேதியியல் பொறியாளரின் பெயரில் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான மருத்துவ மற்றும் பவுதிக துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வேதியியல் துறைக்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியலுக்கான ராயல் சுவீடிஷ் அகாடமி இது குறித்து அறிவித்திருப்பதாவது:
நேனோ தொழில்நுட்பத்தில் உயர் தொழில்நுட்ப பிரிவான "குவான்டம் டாட்ஸ்" துறையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு நுகர்வோர் மின்னணு துறையிலும் மருத்துவ துறையிலும் பல்வேறு புரட்சிகள் ஏற்பட வழி வகுத்த அமெரிக்காவின் புகழ் பெற்ற எம்.ஐ.டி. பல்கலைகழகத்தை சேர்ந்த அமெரிக்கரான மவுங்கி பவெண்டி (Moungi Bawendi), அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைகழகத்தை சேர்ந்த லூயி ப்ரு (Louis Brus) மற்றும் ரஷியாவை சேர்ந்த அலெக்ஸி எகிமோவ் (Alexey Ekimov) ஆகிய மூவருக்கும் இது பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அகாடமி அறிவித்திருக்கிறது.
இந்த மூவரின் பெயர்களை வேதியியல் துறையில் நோபல் பரிசை பெற தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைவர் ஜோஹன் அக்விஸ்ட் (Johan Aqvist) உறுதிப்படுத்தினார்.
வழக்கமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் வரை பரிசுக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். ஆனால், இம்முறை இன்று காலை சுவீடன் நாட்டை சேர்ந்த ஒரு நாளிதழுக்கு மின்னஞ்சல் மூலமாக இந்த மூவரின் பெயர்கள் முன்னரே கசிந்தது சர்ச்சையை உருவாக்கியது.