செய்திகள்

அரை நிர்வாணத்துடன் அட்லாண்டா விமான நிலைய ரன்வேயில் ரகளை செய்த வாலிபர்

Published On 2018-06-28 06:06 GMT   |   Update On 2018-06-28 06:06 GMT
அட்லாண்டா விமான நிலைய ரன்வேயில் அங்குமிங்கும் ஓடிய வாலிபர், விமானத்தின் கதவை திறக்க முயன்று ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #AtlantaAirport
அட்லாண்டா:

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் ஹார்ட்ஃபீல்ட்-ஜாக்சன் சர்வதேச விமான நிலையம் உள்ளது. உலகின் மிகவும் பிசியான விமான நிலையமாக கருதப்படும் இந்த விமான நிலையத்திற்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளிநபர்கள் எளிதில் விமான நிலையத்திற்குள் வர முடியாதபடி, ஓடுபாதை அமைந்துள்ள பகுதியைச் சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதியையும் பாதுகாவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இத்தனை பாதுகாப்பையும் மீறி கடந்த இரு தினங்களுக்கு முன் ஒரு வாலிபர், கம்பி வேலியை தாண்டி குதித்து ஓடுபாதைக்கு வந்துள்ளார். புறப்பட தயாராக இருந்த ஒரு விமானத்தை நெருங்கிய அந்த வாலிபர், விமானத்தில் உள்ளவர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். விமானத்தின் அவசர கால கதவை திறக்கவும் முயன்றுள்ளார். அரை நிர்வாண கோலத்துடன் வந்த அந்த வாலிபர் செய்த ரகளையால் பயணிகள் கடும் பீதி அடைந்தனர்.



இதுபற்றி விமான நிலைய காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் வந்து அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் பெயர்  ஜிரின் ஜோன்ஸ் (வயது 19) என்பதும், விமான நிலையத்தை ஒட்டி கட்டுமானப் பணி நடைபெறும் பகுதியில் இருந்து வேலியை தாண்டி குதித்து உள்ளே வந்திருப்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஜோன்ஸ், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஜோன்ஸ் இதற்கு முன்பு இரண்டு முறை சிறு சிறு தவறுகளுக்காக தனது சொந்த மாநிலமான அலபாமாவில் கைது செய்யப்பட்ட தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. #AtlantaAirport
Tags:    

Similar News