செய்திகள்

பாகிஸ்தானில் உளவுப்படையை விமர்சித்ததால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நீதிபதி வழக்கு

Published On 2018-10-27 20:30 GMT   |   Update On 2018-10-27 20:30 GMT
பாகிஸ்தானில் உளவுப்படையை விமர்சித்ததால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நீதிபதி சவுக்கத் அஜீஸ் சித்திக் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். #IslamabadHighCourt #FormerJudge #ShaukatAzizSiddiqui
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்தவர், சவுக்கத் அஜீஸ் சித்திக். இவர் அங்கு ராவல்பிண்டியில் நடந்த வக்கீல்கள் சங்க கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது, பாகிஸ்தான் உளவுப்படையைப் பற்றி விமர்சித்தார்.

அப்போது அவர், கோர்ட்டு நடவடிக்கைகளில் பாகிஸ்தான் உளவுப்படை ஐ.எஸ்.ஐ. தலையிடுவதாகவும், வழக்குகளை விசாரிப்பதில் அமர்வுகளை அமைப்பது, வழக்குகளை குறிப்பிட்ட நீதிபதிகளுக்கு ஒதுக்குவது வரையில் குறுக்கிடுவதாகவும் குற்றம் சாட்டினார். நவாஸ் ஷெரீப்பையும், அவரது மகள் மரியம் நவாசையும் தேர்தல் முடியும் வரை சிறையில் இருந்து வெளியே விடக்கூடாது என அழுத்தம் தந்ததாகவும் கூறினார்.

இது தொடர்பான புகாரை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட சுப்ரீம் நீதித்துறை கவுன்சில் அமைத்து விசாரணை நடத்தி, நீதிபதி சித்திக்கை பதவியை விட்டு நீக்க சிபாரிசு செய்தது. அதன் பேரில் அவரை பதவியில் இருந்து நீக்கி ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் சவுக்கத் அஜீஸ் சித்திக் நேற்று முன்தினம் வழக்கு தாக்கல் செய்தார். தன்னை பதவி நீக்கம் செய்து கடந்த 11-ந் தேதி வெளியிட்ட அறிவிக்கை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று முறையிட்டு உள்ளார். 30 பக்கங்களைக் கொண்ட மனுவில் அவர் மறுபடியும் பாகிஸ்தான் உளவுப்படை ஐ.எஸ்.ஐ. மீது புகார்களை அடுக்கி உள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #IslamabadHighCourt #FormerJudge #ShaukatAzizSiddiqui
Tags:    

Similar News