உலகம் (World)
வெடிகுண்டு தாக்குதல்

கிழக்கு உக்ரைனில் வெடிகுண்டு தாக்குதல்- பொதுமக்கள் பீதி

Published On 2022-02-23 10:02 GMT   |   Update On 2022-02-23 10:02 GMT
உக்ரைன்- ரஷியா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கிழக்கு உக்ரைனில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வெடிகுண்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.


கிழக்கு உக்ரைனில் உள்ள டென்ட்ஸ்க் மாகாணத்தில் ஒரு பகுதி அரசு கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் உள்ளது. அங்கு கிளர்ச்சியாளர்கள் டென்ட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுகன்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றை அமைத்துள்ளனர்.

டென்ட்ஸ்க் மாகாணத்தில் சில நாட்களாக அரசு படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இருதரப்பு பகுதியிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.

இந்த நிலையில் உக்ரைன்- ரஷியா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கிழக்கு உக்ரைனில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வெடிகுண்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

உக்ரைன் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஷ்சஸ்தியா பகுதியில் குடியிருப்புகள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் வீடுகள் கடும் தேசமடைந்து புகை மூட்டம் நிலவியது.

இதனால் பீதியடைந்த மக்கள் பதுங்குக் குழியில் சென்று மறைந்து கொண்டனர். வெடிகுண்டு சத்தம் நின்றபிறகு அவர்கள் வெளியே வந்தனர். வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் லுகன்ஸ்க்கு அருகே உள்ளதாகும்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. வீடுகளில் மின்சாரம் கிடையாது. குண்டு வெடிக்கும் சத்தங்களை கேட்டதும், பதுங்குக் குழிக்குள் சென்று விடுகிறோம். பின்னர் வெளியே வரும்போது மீண்டும் குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்கிறது. இதனால் பீதியில் இருக்கிறோம்‘ என்றனர்.

Similar News