உலகம்

ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு: 26 பேர் பலி- 40 பேர் மாயம்

Published On 2023-07-24 00:28 GMT   |   Update On 2023-07-24 00:29 GMT
  • திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பெரும் சேதமடைந்துள்ளது.
  • கடந்த நான்கு மாதங்களில், இயற்கை பேரழிவு தொடர்பான சம்பவங்களில் 214 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஒரே இரவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேரிடர் மேலாண்மைக்கான மாநில அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷஃபியுல்லா ரஹிமி கூறுகையில், " கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதும் வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பெரும் சேதமடைந்துள்ளது.

மைதான் வார்டக் மாகாணத்தின் ஜல்ரேஸ் மாவட்டத்தில் உள்ள முக்கிய பேரிடர் மண்டலத்திற்கு அவசர உதவிகளுக்காக மீட்புக் குழு விரைந்துள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஜல்ரெஸில் 604 வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் பழத்தோட்டங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ரஹிமி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

நாடு முழுவதும், "கடந்த நான்கு மாதங்களில், இயற்கை பேரழிவு தொடர்பான சம்பவங்களில் 214 பேர் கொல்லப்பட்டுள்ளனர்" என்று ரஹிமி குறிப்பிட்டார்.

Tags:    

Similar News