துருக்கியை தொடரும் சோகம் - சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் பலி
- துருக்கியில் அடுத்தடுத்து 6.4 மற்றும் 5.8 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
- தொடர்ந்து அங்கு 30க்கு மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.
அங்காரா:
தெற்கு துருக்கி - சிரியாவின் எல்லையில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சிறிது நேரத்தில் துருக்கியின் ஹடாய் பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட தடவை நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
துருக்கியின் 3 இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என அங்குள்ள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
துருக்கியில் ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது..