சீனாவில் ஓட்டலில் கியாஸ் கசிந்து தீ விபத்து: 31 பேர் பலி
- திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு கசிவினால் தீ விபத்து
- 7 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்
சீனாவின் வடமேற்கு யின்சுவான் நகரத்தில் இயங்கிவரும் ஃபுயாங் பார்பெக்யு உணவகத்தில் நேற்று எல்.பி.ஜி. (LPG) எனப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு கசிவினால் நடைபெற்ற வெடிவிபத்தில் 31 பேர் பலியாகியுள்ளனர். இதில் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.
10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் புகை மூட்டத்திற்கு இடையே தீயை அணைக்க போராடி வருவதை சம்பவ இடத்து வீடியோ காட்சிகளில் காண முடிந்தது. சீனாவில் 3-நாள் டிராகன் படகு திருவிழா விடுமுறை கொண்டாடப்பட இருக்கிற நிலையில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், ''காயமடைந்தவர்களின் சிகிச்சை நடவடிக்கைகளை முடுக்கிவிடவும், முக்கியமான துறைகளின் பாதுகாப்பிற்கு வலிமையூட்டவும், மக்களின் உயிர் மற்றும் உடமைகளை காக்க தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும்'' உத்தரவிட்டுள்ளார்.
சீனாவின் அவசரக்கால நிர்வாக மேலாண்மை அமைச்சரவை, 100-க்கும் மேற்பட்ட வீரர்களை 20 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தது. உள்ளூர் அதிகாரிகள், உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும், காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கவும், உயிர் பலிகளை குறைக்க தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க கோரியிருந்தது.
நேற்று நடைபெற்ற தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவந்த வீரர்கள், இன்று காலை மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்ததாக தெரிவித்துள்ளனர்.