உலகம்

பாகிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 37 பேர் பலி

Published On 2024-08-25 08:55 GMT   |   Update On 2024-08-25 08:55 GMT
  • ஈரானில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்றது.
  • பிரேக் பிடிக்காததால் அந்தப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

கராச்சி:

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் லாஸ்பெலா மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

ஈரானில் இருந்து சுமார் 70 பக்தர்களை ஏற்றிக்கொண்டு இன்று பஞ்சாப் நோக்கிச் சென்ற பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழு அங்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து அறிந்த பஞ்சாப் முதல் மந்திரி மரியம் நவாஸ் இரங்கல் தெரிவித்தார்.

இதேபோல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயணிகளை ஏற்றிச்சென்ற ஒரு பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. பயணிகள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கினர்.

தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு பேருந்தில் சிக்கி இருந்தவர்களின் உடல்களை மீட்டனர்.

இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இரு விபத்துகளில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News