உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்: நிர்மலா சீதாராமனுக்கு எந்த இடம் தெரியுமா?
- சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட 4 இந்தியர்கள் இடம்பெற்றனர்.
- இந்தப் பட்டியலில் ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடம் பிடித்துள்ளார்.
நியூயார்க்:
உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் கொண்ட பட்டியலை ஆண்டுதோறும் அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. செல்வம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு ஆகிய 4 துறைகளில் இருந்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தை பிடித்து உள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லகார்ட் 2-ம் இடத்தையும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தப் பட்டியலில் இந்தியாவில் இருந்து 4 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் முக்கியமாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 32-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 4 ஆண்டாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்து வரும் அவர் 5-வது முறையாக இந்த ஆண்டும் தனது இடத்தை உறுதி செய்திருக்கிறார்.
இதைப்போல எச்.சி.எல். டெக் தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ரா 60-வது இடத்தையும், இந்திய ஸ்டீல் ஆணைய தலைவர் சோமா மண்டல் 70-வது இடத்தையும் பிடித்து இருக்கின்றனர். பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜூம்தார்-ஷா 76-வது இடத்தை பிடித்துள்ளார்.
இதில் ரோஷினி நாடார் மல்கோத்ரா, சோமா மண்டல், கிரண் மஜூம்தார்-ஷா ஆகியோர் கடந்த ஆண்டிலும் பட்டியலில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.