அதிகாரியின் உயிரை காப்பாற்றிய "ஸ்மார்ட் வாட்ச்"
- அதிகாரி ஒருவரின் உயிரை ‘ஸ்மார்ட் வாட்ச்’ காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
- நிலைகுலைந்தவர் தனது கையில் கட்டியிருந்த ‘ஸ்மார்ட் வாட்ச்’ மூலம் மனைவி லாராவுக்கு போன் செய்து சம்பவத்தை கூறினார்.
இன்றைய காலத்தில் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெறுமனே நேரம் பார்ப்பதற்காக மட்டுமின்றி நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டுபிடித்து 'அலார்ட்' செய்யும் உயிர்காக்கும் கருவியாகவும் 'ஸ்மார்ட் வாட்ச்' செயல்படுகிறது.
அந்த வகையில் அதிகாரி ஒருவரின் உயிரை 'ஸ்மார்ட் வாட்ச்' காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. பிரிட்டனில் உள்ள ஸ்வான்சியின் மோரிஸ்டன் பகுதியை சேர்ந்தவர் பால்வபாம். இவர் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். தினமும் அதிகாலை நடைபயிற்சி செல்லும் இவர் சம்பவத்தன்று நடைபயிற்சி சென்ற போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நிலைகுலைந்த அவர் தனது கையில் கட்டியிருந்த 'ஸ்மார்ட் வாட்ச்' மூலம் மனைவி லாராவுக்கு போன் செய்து சம்பவத்தை கூறினார்.
உடனடியாக விரைந்து சென்ற அவர், கணவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது இதயத்துக்கான ரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளார். தனது 'ஸ்மார்ட் வாட்ச்' மூலம் உயிர் பிழைத்ததாக பால்வபாம் கூறி உள்ளார்.