இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- ஆச்சே மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான சினாபாங்கிற்கு கிழக்கே 362 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உண்டானது.
- சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
ஆச்சே மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான சினாபாங்கிற்கு கிழக்கே 362 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உண்டானது. இது கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சுனாமி ஆபத்து இல்லை என்று இந்தோனேசியாவின் வானிலை, தட்ப வெப்பநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்தது. நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தது. ஆனால் மக்களிடம் சுனாமி பீதி ஏற்பட்டது. பலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சமடைந்தனர்.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி பேரலை, இந்தியா உள்பட பல நாடுகளை தாக்கியது. இதில் 2.30 லட்சம் பேர் பலியானார்கள். இந்தோனேசியாவில் ஆச்சே மாகாணத்தில் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 19-வது நினைவு தினம் முடிந்த 3 நாட்களுக்கு பிறகு இந்தோனேசியாவில் நில நடுக்கம் ஏற்பட்டது.