பிஸ்கெட்டில் விழுந்த வைர மோதிரத்தை தேடும் பேக்கரி உரிமையாளர்
- 40 வருடங்களாக அணிந்திருந்த வைர மோதிரம் தொலைந்து போனதால் எனது இதயம் உடைந்துவிட்டது.
- மோதிரத்தை கண்டறிந்து கொடுப்பவர்களுக்கு நான் நன்றிக்கடனாக இருப்பேன் என கூறி உள்ளார்.
பிஸ்கெட்டில் விழுந்த வைர மோதிரத்தை தேடும் பேக்கரி உரிமையாளர்அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் மோன்ரா. அங்குள்ள நகரம் ஒன்றில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது பேக்கரியில் இருந்து கேக், பிஸ்கெட், குக்கீஸ் ஆகியவை தயாரிக்கப்பட்டு சிறு கடைகளுக்கு வினியோகம் செய்து வருகிறார். இந்நிலையில் பேக்கரியில் பிஸ்கெட்டுகளை தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அப்போது 4 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.30 லட்சம்) மதிப்புள்ள வைர மோதிரத்தை தனது விரலில் அணிந்துள்ளார்.
மோன்ராவின் நிச்சயதார்த்தத்தின் போது அணிவிக்கப்பட்ட அந்த மோதிரத்தை அவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அணிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி பேக்கரிக்கு சென்று திரும்பிய போது தான் அவரது வைர கல் பதித்த அந்த மோதிரம் தொலைந்து போனதையும், அதை பிஸ்கெட் தயாரிக்க தேவையான பொருட்களை தயாரிக்கும் பெரிய குடுவைக்குள் போட்ட நியாபகம் வந்துள்ளது. இதனால் பிஸ்கெட் தயாரிக்கும் குடுவைக்குள் மோதிரக் கல் விழுந்திருக்கலாம் என கருதிய அவர், இதுபற்றிய விபரங்களை பேஸ்புக் தளத்தில் பகிர்ந்தார். அதில், 40 வருடங்களாக அணிந்திருந்த வைர மோதிரம் தொலைந்து போனதால் எனது இதயம் உடைந்துவிட்டது. அந்த மோதிரம் பிஸ்கெட் தயாரிக்கும் போது விழுந்திருக்கலாம் என்பதால், அந்த மோதிரத்தை கண்டறிந்து கொடுப்பவர்களுக்கு நான் நன்றிக்கடனாக இருப்பேன் என கூறி உள்ளார். வாடிக்கையாளர்கள் யாரும் பிஸ்கெட்டை கடித்து பற்களை உடைத்து கொள்ள வேண்டாம் என உஷார்படுத்தி உள்ள மோன்ரா, மோதிரத்தை கண்டுபிடித்தால் திருப்பித்தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.