ஒரு பாட்டில் குடிநீர் இவ்வளவு லட்சமா?
- அப்படி என்ன இந்த குடிநீரில் விசேஷம்?
- சுத்தமான குடிநீரைப் பெறுவதே கோடிக்கணக்கான மக்களுக்கு கனவாக உள்ளது.
மனிதர்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவை களில் ஒன்று குடிநீர். ஆனால், ஆடம்பர பாட்டில் குடிநீர் பயன்பாடு என்பது தற்போது பெருவசதி படைத்தவர்களிடையே உருவாகியுள்ளது.
அந்த வகையில், உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் குடிநீராக, ஜப்பானில் தயாரிக்கப்படும் 'பிலிகோ ஜூவல்லரி வாட்டர்' உள்ளது.
இதன் ஒரு லிட்டர் விலை, ஆயிரத்து 390 டாலர்கள்.
இந்திய மதிப்பில் உத்தேசமாக ரூ.1 லட்சத்து 16 ஆயிரம்!
அப்படி என்ன இந்த குடிநீரில் விசேஷம்?
இது மிக மிகத் தூய்மையானது என்பதுடன், ரொம்ப ஆடம்பரமான பாட்டில்களில்தான் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த பாட்டில்கள், விலை உயர்ந்த ஸ்வரோவ்ஸ்கி கற்களால் ஆபரணம் போல வடிவமைக்கப்படுகின்றன.
தங்க அலங்காரங்கள் மற்றும் சிக்கலான வடிவமைப்புகளைக் கொண்ட, உன்னிப்பாக கவனத்துடன் செய்யப்பட்ட கைவினைப்பொருளாக இந்த பாட்டில் உருவாக்கப்படுகிறது.
இதில் நிரப்பப்படும் நீர், ஜப்பானின் கோபேயில் உள்ள இயற்கை நீரூற்றில் இருந்து பெறப்படுகிறது. இந்த தண்ணீர், மிக உயர்தரமானதாக கருப்படுகிறது.
ஆடம்பரத்தை விரும்புவோர், அதற்காக தயங்காமல் பணத்தை அள்ளிவிடத் தயாராக இருப்போரை இந்த தண்ணீருடன், இதன் ஆடம்பர பாட்டில் அலங்காரமும் கவர்கிறது.
இந்த பூமியில், சுத்தமான குடிநீரைப் பெறுவதே கோடிக்கணக்கான மக்களுக்கு கனவாக உள்ளது. ஆனால் சிலருக்கோ. குடிக்கும் நீருக்கு, கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பணம் செலவழிக்க முடிகிறது. அதையும் கூட தங்கள் அந்தஸ்தின் அடையாளமாக கருதுகிறார்கள்.
முரண்பாடுகளின் மொத்த உருவமாய் நம் உலகமே உள்ளது!