உலகம்

போராட்டம் எதிரொலி: வங்காளதேசத்தில் அலுவலகத்தை மூடியது எல்.ஐ.சி.

Published On 2024-08-05 12:25 GMT   |   Update On 2024-08-05 12:27 GMT
  • பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
  • இதையடுத்து வங்காளதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

டாக்கா:

வங்காளதேசத்தில் அரசுக்கு எதிரான வன்முறைப் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்த வன்முறை மற்றும் மோதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளார். அங்கிருந்து லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. அங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் போராட்டம் தொடர்ந்து நடந்து வருவதாலும், சமூக-அரசியல் பதற்றம் அதிகரித்திருப்பதாலும் டாக்காவில் செயல்பட்டு வந்த எல்.ஐ.சி. அலுவலகம் இன்று மூடப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் வரும் 7-ம் தேதி வரை எல்.ஐ.சி. அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என எல்.ஐ.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் காரணமாக இந்தியா-வங்காளதேச எல்லை முழுவதும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News