தாய்லாந்தில் சோகம்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 ஊழியர்கள் பலி
- தாய்லாந்தில் பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் 23 தொழிலாளர்கள் தீயில் சிக்கி பலியாகினர்.
பாங்காக்:
சீன புத்தாண்டு அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளதால் தாய்லாந்து பட்டாசுகளுக்கு தேவை அதிகம் உள்ளது. இதனால் தாய்லாந்து பட்டாசு ஆலைகள் இறுதிக்கட்ட தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தாய்லாந்தின் சுபன் பூரி மாகாணத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை இடிந்து முற்றிலுமாக தரைமட்டமானது. அந்த இடமே கரும்புகையால் சூழப்பட்டது. அப்போது 30 ஊழியர்கள் வரை பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து தேசிய பேரிடர் தடுப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் 23 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் பலரது உடல்கள் துண்டு துண்டுகளாக சிதறியதால் அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 23 ஊழியர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.