ஆழ்கடலில் சிக்கிய Surfer.. காப்பாற்றி கரைசேர்த்த ஆப்பிள் வாட்ச்
- தண்ணீருக்கு அடியில் சிக்கிக்கொண்ட ஷெர்மேன் சுமார் 20 நிமிடங்கள் போராடினார்.
- சென்சார்கள் மற்றும் செல்லுலார் இணைப்பு அவர் உயிரை காப்பாற்ற உதவியது.
ஆஸ்திரேலியாவின் பைரன் விரிகுடா கடற்கரையில் பாடிசர்ஃபிங் செய்யும்போது ஆபத்தான நிலையில் இருந்த ரிக் ஷெர்மேனை மீட்பதில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா முக்கிய பங்கு வகித்தது.
அனுபவம் வாய்ந்த நீச்சல் வீரரான ரிக் ஷெர்மேன், கடலில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டார். டாலோ பீச்சில் சக்தி வாய்ந்த அலைகள் அவரை தாக்கியதால் அவர் கரைக்குத் திரும்ப முடியாமல் போனது.
தண்ணீருக்கு அடியில் சிக்கிக்கொண்ட ஷெர்மேன் சுமார் 20 நிமிடங்கள் போராடினார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பிறகு, தனக்கு உடனடி உதவி தேவை என்பதை அறிந்து கொண்டார்.
அவருடன் வந்த நண்பர் ஷெர்மேன் புறப்பட்டு சென்றதாக நினைத்து, அவரை தேடாமல் இருந்தார். அதிர்ஷ்டவசமாக, ஷெர்மேன் தனது ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவை அணிந்திருந்தார். இதில் உள்ள சென்சார்கள் மற்றும் செல்லுலார் இணைப்பு அவர் உயிரை காப்பாற்ற உதவியது.
ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவில் உள்ள சென்சார்கள் ஷெர்மேன் ஆபத்தில் இருப்பதை உறுதிப்படுத்தி, ஆஸ்திரேலிய அவசர சேவைகளை தொடர்பு கொண்ட கடலில் ஒருவருக்கு உதவி வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தது.
இதைத் தொடர்ந்து அவசர சேவைகள் விரைந்து வந்ததால், ஷெர்மேன் பத்திரமாக மீட்கப்பட்டார். ஏற்கனவே நீச்சல் அறிந்திருந்த ஷெர்மேன் ஆபத்து சமயங்களில் தப்பித்துக் கொள்ளும் யுத்திகளை கையாண்டு கடலில் தனது உயிரை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
மீட்கப்பட்ட ஷெர்மேன் தனது ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா உயிர்காக்கும் கருவியாக செயல்பட்டதை நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டார்.