உலகம்

தாக்குதலில் ஈடுபடும் வீரர் (கோப்பு படம்)

அசர்பைஜான் எல்லையில் மீண்டும் மோதல்- ஆர்மீனியா வீரர்கள் 50 பேர் பலி

Published On 2022-09-13 14:21 GMT   |   Update On 2022-09-13 14:21 GMT
  • ஆர்மீனியா பல ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தை விட்டுக்கொடுத்தது.
  • அமைதியை நிலைநாட்ட ரஷியா சுமார் 2,000 அமைதிப் படையினரை அனுப்பியது.

யெரவன்:

நாகோர்னோ காராபாக் பிராந்தியம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா நாடுகளுக்கு இடையில் மோதல் போக்கு நீடிக்கிறது. 1990களிலும், 2020லும் இரு தரப்பிடையே போர் நடந்தது. இந்த மோதலில் ராணுவ வீரர்களும் அப்பாவி பொதுமக்களும் ஆயிரக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர்.

2020 இறுதியில் சுமார் 6 வார காலம் நீடித்த போர், ரஷியாவின் தொடர் முயற்சியால் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் 3 நாடுகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர். நாகோர்னோ காராபாக் பிராந்தியத்தில் அனைத்து விரோத நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதாக அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா நாடுகளின் தலைவர்கள் கூட்டாக அறிவித்தனர்.

நாகோர்னோ காராபாக் பிராந்தியம் அஜர்பைஜானில் உள்ளது. இங்கு ஆர்மேனிய மக்கள் வசிக்கின்றனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஆர்மீனியா பல ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தை விட்டுக்கொடுத்தது. நிரந்தர அமைதி நிலவாத நிலையில், போர்நிறுத்தத்தை மேற்பார்வையிடவும் அமைதியை நிலைநாட்டவும், ரஷியா சுமார் 2,000 அமைதிப் படையினரை அனுப்பியது.

இந்நிலையில் ஆர்மீனியா-அசர்பைஜான் எல்லையில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆர்மீனியா தரப்பில் 50 வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அசர்பைஜான் படைகள் தங்கள் பிராந்தியத்திற்குள் ஊடுருவ முயற்சிப்பதாகவும், இதை தடுக்க உலக நாடுகளின் தலைவர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்பின்னர், சண்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதாகதாகவும் ரஷியா கூறி உள்ளது. எனினும் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

ஆர்மீனியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷியா, கடந்த ஆறு மாத காலமாக உக்ரைன் போரில் கவனம் செலுத்தி வருவதால், இந்த பிரச்சினையில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே, திடீரென மோதல் ஏற்பட்டிருக்கிறது.

இதேபோல் அசர்பைஜான் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவலை வெளியிடவில்லை.

Tags:    

Similar News