உலகம்

காசா மீது இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் 230 பேர் பலி

Published On 2023-10-08 03:46 GMT   |   Update On 2023-10-08 03:46 GMT
  • இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது.
  • காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 230 பேர் உயிரிழந்தனர்.

ஜெருசலேம்:

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இஸ்ரேலின் எல்லையோர நகரங்களில் சில பகுதிகளை ஹமாஸ் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதால் அந்த பகுதிகளை கைப்பற்ற இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் தொடங்கியுள்ளனர். மேலும், இஸ்ரேல் போர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 230 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் இடையிலான மோதலில் இதுவரை 530க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் 2வது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. இதனால், இஸ்ரேல் - காசா இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

போரை தீவிரப்படுத்தப் போவதால் காசாவில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News