உலகம்

பூர்வகுடி மக்கள் மற்றும் பழங்குடியினரின் உரிமைகள் நிலைநாட்டப்படுமா?: ஆஸ்திரேலியாவில் பொது வாக்கெடுப்பு

Published On 2023-08-30 07:44 GMT   |   Update On 2023-08-30 07:44 GMT
  • ஆஸ்திரேலிய அரசியலமைப்பு சட்டத்தில் அவர்கள் குறித்து சிறு குறிப்பு கூட கிடையாது
  • வாய்ஸ் டு பார்லிமென்ட் எனப்படும் ஒரு கமிட்டி அமைக்கப்படும்

அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அந்நாட்டிலேயே காலங்காலமாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களுக்கு அந்நாடுகளில் பிற்காலத்தில் குடியேறி தற்போது வரை குடிமக்களாக வாழும் மக்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும் கிட்டத்தட்ட சரிசமமாக வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆஸ்திரேலியாவில் மட்டும், அங்குள்ள 2.5 கோடி (26 மில்லியன்) மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3.2% பழங்குடி மக்கள் வசித்து வந்தாலும் அவர்களுக்கு பின் அங்கு குடியேறியவர்களுக்கு உள்ள உரிமைகள் இல்லாததால், பழங்குடியினரின் சமூக, பொருளாதார வாழ்வியல் மிகவும் பின்னடைந்துள்ளது.

வடக்கு ஆஸ்திரேலியாவிற்கும், நியூ கினியாவிற்கும் இடையில் உள்ள டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுகளில் வாழ்பவர்களுக்கும், ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிவழியாக வாழ்வதாக கூறப்படும் பழங்குடியினர்களான ஆஸ்திரேலிய அபோரிஜின்ஸ் மக்களுக்கும், ஆஸ்திரேலியாவில் சட்டமியற்றுதலில் பங்கேற்கும் உரிமைகள் தற்போது வரை கிடையாது.

ஆஸ்திரேலியா ஒரு தனி நாடாக உருவானதும், அங்கு வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தில் ஆஸ்திரேலிய கண்டத்தில் சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக வாழ்வதாக நம்பப்படும் அபோரிஜின்ஸ் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுவாசிகளை குறித்து எவ்வித குறிப்பும் கிடையாது என்பது கசப்பான உண்மை.

இதனை மாற்ற தீவிர முயற்சிகளை கடந்த ஜூன் மாதம் முதல் எடுத்து வரும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், வரும் அக்டோபர் 14-ஐ அன்று இதனை மாற்ற ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

"நெருங்கும் அக்டோபர் 14 தான் நம்முடைய நேரம். அபோரிஜின்ஸ் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு பழங்குடியினருக்கும் இது ஒரு மராத்தான் ஓட்டப்பந்தயம் போன்று நீண்டகால போராட்டமாக இருந்தது. நமக்கு இது ஒரு குறுகிய கால ஸ்ப்ரின்ட் ஓட்டம்" என அல்பானீஸ் தெரிவித்தார்.

இம்முயற்சி வெற்றி பெற்றால், உள்நாட்டு மக்களுக்கான உரிமைகள் குறித்து "பாராளுமன்றத்தின் குரல்" (Voice to Parliament) எனும் ஒரு கமிட்டி அமைக்கப்படும். இக்கமிட்டி பழங்குடியினரின் ஆரோக்கியம், வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, கல்வி உட்பட அவர்களின் அடிப்படை உரிமைகள் குறித்து முடிவெடுக்க அரசுக்கும், பாராளுமன்றத்திற்கும் ஆலோசனைகள் வழங்கும் அதிகாரம் பெறும்.

இத்தைகைய ஒரு கமிட்டி அமைவதை மக்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக இந்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.

அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்கள் செய்வதற்கு மக்களிடம் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் ஆதரவு கிடைத்தாக வேண்டும் என்பது ஆஸ்திரேலியாவில் ஒரு கட்டாய வழிமுறையாகும்.

இந்த முடிவுக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் பல கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த கமிட்டி உருவானாலும் அது ஒரு சக்தியற்றதாக இருக்கும் எனும் கருத்தும் அங்கு பலம் பெறுகிறது.

அக்டோபர் 14 அன்று வாக்கெடுப்பில் மக்கள் தரப்போகும் முடிவை அரசியல் வல்லுனர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News