பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு முன் ஜாமீன்
- 9-ந் தேதி இம்ரான்கானை துணை ராணுவத்தினர் கைது செய்தனர்.
- அவரது கட்சியினர் நாடெங்கும் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டனர்.
லாகூர் :
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டுக்கு கடந்த 9-ந் தேதி ஆஜராக வந்தார். அப்போது அதே வழக்கில் அவரை துணை ராணுவத்தினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இது அவரது கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் நாடெங்கும் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டனர். லாகூரில் ராணுவ உயர் அதிகாரியின் வீடும் தாக்குதலுக்கு தப்பவில்லை.
இம்ரான்கான் கைதைத் தொடர்ந்து லாகூரில் நடந்த வன்முறைகள் தொடர்பாக, அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த வழக்குகளில் அவருக்கு லாகூர் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு நேற்று முன் ஜாமீன் வழங்கியது.
முன் ஜாமீன் பெற்ற பின்னர் கோர்ட்டில் நிருபர்கள் மத்தியில் இம்ரான்கான் பேசியபோது, "கடந்த 35 ஆண்டுகளில் இப்போது நடப்பது போல கைது நடவடிக்கைகளை நான் பார்த்தது இல்லை. எல்லா மனித உரிமைகளும், அடிப்படை உரிமைகளும் முடிவுக்கு வருகின்றன. கோர்ட்டுகள்தான் மனித உரிமைகளை இப்போது காத்து வருகின்றன. ஆனாலும் கடைசி பந்துவரை நான் போராடுவேன்" என குறிப்பிட்டார்.