ஹமாஸ், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான போர் இலக்கின் அப்டேட்: நேதன்யாகு அறிவிப்பு
- ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருவதால் இஸ்ரேல் எல்லையில் உள்ள மக்கள் வெளியேற்றம்.
- வெளியேறிய மக்களை அவர்களது வீட்டிற்கு பாதுகாப்பாக திரும்ப வைப்பது இலக்கு என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாத் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தியது.
எதிர்காலத்தில் ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேல் நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதி செய்வதுதான் எங்களது இலக்கு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்திருந்தார்.
பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் ஆதரவு பெற்ற லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல்- ஹிஸ்புல்லா தினந்தோறும் பரஸ்பர தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதி எல்லையில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடத்தில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தங்களுடைய போர் இலக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
பெஞ்சமின் நேதன்யாகு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அரசியல்- பாதுகாப்பு மந்திரிசபை தங்களது போர் இலக்கை புதுப்பித்துள்ளது. நாட்டின் வடக்குப் பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவது என்பதை போர் இலக்கில் சேர்க்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
இதனால் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவிற்கு எதிராக தாக்குதலை இஸ்ரேல் அதிகரிப்பதுடன் லெபனான்- இஸ்ரேல் எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்ய தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலஸ்தீன நட்பு நாடுகளுக்கு தங்களது ஆதரவு எனத் தெரிவித்த ஹிஸ்புல்லா, லெபனானின் தெற்கில் உள்ள எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் வலியுறுத்தும் அதே வேளையில், காசா போர் நிறுத்தம் ஏற்பட்டால் எங்களது தாக்குதல் முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.