சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார் பில்கேட்ஸ்
- கொரோனா கட்டுப்பாடு தளர்ந்த நிலையில் 4 வருடத்திற்குப் பிறகு பில்கேட்ஸ் சீனா வருகை
- அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்அதிபரை சீன அதிபர் சந்திக்க இருப்பது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது
அமெரிக்க மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் அறக்கட்டளை அமைப்பின் தலைவருமான பில் கேட்ஸ் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார்.
கோவிட் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகு சீனாவிற்கு பல மேற்கத்திய தலைவர்கள் வருகை புரிகின்றனர். அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன் சீனாவிற்கு கடந்த வாரம் வந்திருந்தார். கடந்த மார்ச் மாதம் சீனாவின் பீஜிங் நகருக்கு வந்திருந்த ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், சீனாவுடன் ஆப்பிள் நிறுவனத்திற்கும் ஒரு இணைதிறனுடைய உறவுமுறை நிலவுவதாக குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சென்ற 3 வருடங்களில் முதல்முறையாக வருகை தந்தார். சீனாவில் விரிவான வணிக ஆர்வமுடைய மஸ்க், சீன ஷாங்காய் நகரில் உள்ள டெஸ்லாவின் மிகப்பெரிய தொழிற்சாலையில் தமது பணியாளர்களை சந்தித்தார்.
இப்பொழுது உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான அமெரிக்காவின் பில் கேட்ஸ் வருகை தந்துள்ளார். அமெரிக்க நாட்டு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஞாயிறன்று சந்திக்க இருக்கும் பின்னணியில் இது மிகவும் முக்கிய சந்திப்பாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை:-
மலேரியா மற்றும் காசநோய் ஒழிப்பிற்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்காக சீனாவிற்கு இந்த அறக்கட்டளை 50 மில்லியன் டாலர் வழங்கும். கேட்ஸ், பீஜிங் நகராட்சி மற்றும் ட்சிங்குவா பல்கலைகழகம் இணைந்து உருவாக்கிய உலகளாவிய ஆரோக்கியத்திற்கான மருந்து கண்டுபிடிப்பு நிறுவனம் (GHDDI) எனப்படும் அமைப்பிற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படும்.
மலேரியா மற்றும் காசநோய் போன்ற பெரும்பாலான உலகின் ஏழை மக்களை தாக்கும் நோய்கள் ஒழிப்பிற்காக எடுக்கப்படும் உயிர்காக்கும் சிகிச்சை முறைகள் மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டுக்கான வழிமுறைகளுக்கு இந்த தொகை உறுதுணையாக இருக்கும். உலகளாவிய ஆரோக்கியத்திற்கான மருந்து கண்டுபிடிப்பு நிறுவனத்தில் பேசிய பொழுது கேட்ஸ், மலேரியா மற்றும் காசநோய் ஒழிப்பிற்காக சீனா எடுக்கும் முயற்சிகளை பாராட்டியுள்ளார்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
சீனாவிற்குள் வறுமை ஒழிப்பிலும், ஆரோக்கிய மேம்பாட்டிலும் அந்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் சவால்களை சமாளிக்க சீனாவால் பெரிய பங்காற்ற முடியும் என்றும் கேட்ஸ் தெரிவித்திருக்கிறார்.
பில் கேட்ஸ் கடைசியாக 2019-ம் வருடம் வந்திருந்தபோது சீன முதல் பெண்மணி பெங்க் லியுவானை சந்தித்து தமது அறக்கட்டளை மூலமாக ஹெச்.ஐ.வி./எய்ட்ஸ் தடுப்பிற்காக செய்யப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து அவரிடம் பேசினார்.
சீன நாட்டு அதிபருடன் வெளிநாட்டு தலைவர் ஒருவர் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல்முறையாகும்.