பிரிட்டனில் பரபரப்பு - பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இளவரசர் சார்லஸ் பணம் பெற்றார்?
- சார்லஸ் அறக்கட்டளை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்து வருகிறது.
- பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இளவரசர் சார்லஸ் தனது அறக்கட்டளைக்கு நிதி பெற்றதாக செய்தி வெளியானது.
லண்டன்:
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன். அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான பின்லேடனை கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்கா சுட்டுக் கொன்றது.
இதற்கிடையே, சர்வதேச அளவில் பயங்கரவாதியாக அறியப்பட்ட பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பணம் பெற்றதாக வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒசாமா பின்லேடனின் சகோதரர்களான பாக்ரி மற்றும் ஷஃபீக்கிடம் இருந்து இளவரசர் சார்லஸ் நடத்தி வரும் அறக்கட்டளை கடந்த 2011 -ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 1 மில்லியன் பவுண்டுகளை நன்கொடையாக பெற்றதாக லண்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் இளவரசர் சார்லஸ் தலைமையிலான அறக்கட்டளை நன்கொடை பெறலாமா என பிரிட்டன் பத்திரிகைகள் கடுமையாக தாக்கி செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், சார்லஸ் அறக்கட்டளை தலைவர் சர் அயன் செஷர் கூறியதாவது:
சார்லஸ் அறக்கட்டளை பிரிட்டனில் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் திட்டங்களுக்கு நன்கொடை அளித்து வருகிறது.
ஒசாமா பின்லேடனுக்கும், அவரது உறவினர்களுக்கும் 1994 முதல் எந்தத் தொடர்பும் இல்லை. பின்லேடன் சகோதரர்கள் சார்லஸ் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தது உண்மை. பின்லேடன் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக நன்கொடை தந்திருக்கலாம். இந்த பணம் சட்டப்படி உரிய விதிமுறைகளைப் பின்பற்றி பெறப்பட்டுள்ளது.
அனைத்து அமைப்புகளிடம் தெரிவித்து ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளது. எல்லாம் வெளிப்படையாக நடந்துள்ளது. இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. இந்த நன்கொடையை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குவது ஏன் எனத் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.