அரிய வகை நோயால் அவதி: எப்போதும் முக கவசத்துடன் இருக்கும் 11 வயது சிறுவன்
- பார்சிலோனாவில் வசிக்கும் பால் டாமிங்கஸ் என்ற சிறுவனுக்கு சூரிய ஒளி என்றாலே அலர்ஜி.
- ஜெரோடெர்மா பிக்மெண்டோசம் என்ற அரியவகை நோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
பார்சிலோனா:
மனித உடலின் மேல் சில மணி நேரமாவது சூரிய ஒளி படவேண்டும். அப்பொழுது தான் உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கும் என கூறுவார்கள்.
ஆனால் ஸ்பெயினின் பார்சிலோனாவில் வசிக்கும் பால் டாமிங்கஸ் என்ற 11 வயது சிறுவனுக்கு சூரிய ஒளி என்றாலே அலர்ஜி. இதனால் அவர் தன் உடலின் மேல் சூரிய ஒளி படாத வகையில் முக கவசம் மற்றும் ஆடைகளை அணிந்தே வெளியில் சென்று வருகிறார்.
மில்லியனில் ஒருவருக்கு மட்டுமே வரும் ஜெரோடெர்மா பிக்மெண்டோசம் (xeroderma pigmentosum) என்ற அரியவகை நோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் தோல் புற்றுநோயால் எளிதில் உருவாகக் கூடும். கடுமையான வெடிப்பு, வறண்ட சருமம் மற்றும் தோல் நிறமியில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை ஜெரோடெர்மா பிக்மெண்டோசம் நோயின் அறிகுறிகளாகும். மேலும் காது கேளாமை, வலிப்பு மற்றும் கண்புரை ஆகியவற்றிற்கும் இது வழிவகுக்கும்.
இதுதொடர்பாக, பால் டாமிங்கஸ் கூறுகையில், நான் பகலில் வெளியே செல்வேன். அதற்கு பாதுகாப்பு ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். நீண்ட சட்டை, தொப்பிகள், கண் கண்ணாடி மற்றும் முகக் கவசம் ஆகியவற்றை கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என தெரிவித்தார்.
எப்போதும் முக கவசம் உள்பட நீண்ட சட்டை அணிந்து செல்லும் சிறுவனை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.