உலகம் (World)

வலுக்கும் மோதல்.. இந்தியாவில் உள்ள கனடா தூதர்கள் 6 பேர் வெளியேற்றம்

Published On 2024-10-14 23:45 GMT   |   Update On 2024-10-15 01:08 GMT
  • கனடா மற்றும் இந்தியா இடையே தூதரக அளவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
  • நிஜ்ஜார் கொலை பிரச்சனையை கனடா மீண்டும் கிளறியுள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18 ஆம் தேதி கனடாவில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்திய அரசின் தொடர்பு உள்ளது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனைத்தொடர்ந்து இந்தியா- கனடா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. விசா ஒப்புதல் உள்ளிட்ட சேவைகளும் சற்று காலத்துக்கு முடங்கின. பின்னர் இரு நாடு உறவும் சுமூகமாக சூழளுக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் தற்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதுபோல் நிஜ்ஜார் கொலை பிரச்சனையை கனடா மீண்டும் கிளறியுள்ளது. அதாவது, நிஜ்ஜார் கொலையில் கனடாவுக்கான இந்தியத் தூதருக்கு தொடர்புள்ளதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து, இந்தியா மற்றும் கனடா இடையேயான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கனடாவில் இந்திய அரசின் வன்முறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்திய தூதர்கள் பணியாற்றினர் என்பதற்கான சான்றுகளை கனடா போலீசார் சேகரித்து உள்ளனர் என கனடா குற்றச்சாட்டை தெரிவித்தது.

இதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்ததுடன், கனடாவின் தூதர் ஸ்டூவர்ட் வீலருக்கு இன்று சம்மன் அனுப்பி, அந்நாட்டிலுள்ள இந்திய தூதர் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது அடிப்படையற்ற வகையில் குற்றச்சாட்டுகளை சுமத்துவது என்பது முற்றிலும் ஏற்று கொள்ள முடியாதது என தெரிவித்தது.

இந்நிலையில், கனடாவில் உள்ள இந்திய தூதர்களை திரும்பப்பெறுவதாக தெரிவித்த மத்திய அரசு,  ஸ்டீவர்ட் வீலர் உட்பட இந்தியாவில் உள்ள கனடாவுக்கான தூதர்கள் 6 பேரை வரும் 19 ஆம்  தேதிக்குள் வெளியேற வேண்டும் என்றும் அதிரடியாக  உத்தரவிட்டுள்ளது. இதனால் கனடா மற்றும் இந்தியா இடையே தூதரக அளவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News