உலகம் (World)

கனடாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு- பிரதமர் அதிரடி நடவடிக்கை

Published On 2024-10-25 05:08 GMT   |   Update On 2024-10-25 05:08 GMT
  • ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கும் முதல் நடவடிக்கை இதுவாகும்.
  • ட்ரூடோ அரசின் இந்த அறிவிப்பு கனடா பொருளாதாரத்தை பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒட்டாவா:

வடஅமெரிக்க நாடான கனடா சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து குடியேறுபவர்களை நம்பி தான் இந்நாட்டின் பொருளதார வளர்ச்சி உள்ளது. ஆனால் சமீப காலமாக இந்திய வம்சாவளியினர் என்ற போர்வையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அங்கிருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதில் இருந்து இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக எம்.பி.க்களும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அவர் பதவி விலக வேண்டும் என கெடுவும் விதித்துள்ளனர். இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இனி வரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கனடாவில் குடியேறும் மக்களின் எண்ணிக்கையை குறைக்க போவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு கனடாவில் புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க போகிறோம். இது தற்காலிகமானது தான் என தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்த ஆண்டு 4 லட்சத்து 85 ஆயிரமாக இருக்கும் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 2025-ம் ஆண்டு 3 லட்சத்து 95 ஆயிரமாகவும், 2026-ம் ஆண்டு 3 லட்சத்து 80 ஆயிரமாகவும் குறைக்கப்படும். 2027-ம் ஆண்டு இது 3 லட்சத்து 65 ஆயிரமாக குறையும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

தொழிலாளர்கள் தேவையை நிவர்த்தி செய்யவும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கும் முதல் நடவடிக்கை இதுவாகும். இதனை சிலர் விமர்சனம் செய்துள்ளனர். கனடா போன்ற மிகப்பெரிய நிலப்பரப்பு கொண்ட நாட்டில் உற்பத்தி நிலையானதாக இருக்கிறது. இதனை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் ஆட்களின் எண்ணிக்கை அவசியம். ஆனால் ட்ரூடோ அரசின் இந்த அறிவிப்பு கனடா பொருளாதாரத்தை பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Tags:    

Similar News