உலகம் (World)

அமீரகத்தில் வரும் வாரத்தில் வெப்பநிலை மேலும் குறையக்கூடும்- தேசிய வானிலை மையம் தகவல்

Published On 2024-10-24 03:54 GMT   |   Update On 2024-10-24 03:54 GMT
  • அமீரகத்தின் சில இடங்களில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் பனி மூட்டம் காணப்பட்டது.
  • வாகன ஓட்டிகள் சாலைகளில் இருக்கும் அறிவிப்பு பலகைகளை பார்த்து அதன்படி செயல்பட வேண்டும்.

துபாய்:

அமீரக தேசிய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த வெப்பநிலை வரும் வாரத்தில் இருந்து 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். இதனால் காலநிலை இதமாக இருக்கும். அமீரகத்தின் வடமேற்கு பகுதியில் வருகிற சனிக்கிழமை முதல் காற்றின் வேகம் சற்று அதிகரித்து காணப்படும். இதுவும் வெப்பநிலை குறைவதற்கு காரணமாக இருக்கும்.

மேலும் அமீரகத்தின் சில இடங்களில் வரும் நாட்களில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக துபாய் மற்றும் அல் அய்ன் இடையிலான பகுதிகளிலும், புஜேரா, ராசல் கைமா, கல்பா உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து கடல் மற்றும் மலைப்பகுதிகளில் ஏற்படும் மேகங்கள் காரணமாக இந்த மழை சற்று அதிகரிக்கும். குறிப்பாக அபுதாபியின் அல் தப்ரா பகுதியில் அதிக மழை பெய்யக்கூடும். ஓமன் கடல் பகுதிகளில் ஏற்படும் காற்று உள்ளிட்ட காலநிலை மாற்றம் காரணமாக மழை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) அமீரகத்தின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். எனவே வெளியிடங்களுக்கு செல்பவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். கடலில் அலையின் வேகம் வழக்கத்தைவிட சற்று அதிகமாக இருக்கும். எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

அமீரகத்தின் சில இடங்களில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் பனி மூட்டம் காணப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களில் காலை காலங்களிலும் பனிமூட்டம் நிலவ கூடும். எனவே வாகன ஓட்டிகள் சாலைகளில் இருக்கும் அறிவிப்பு பலகைகளை பார்த்து அதன்படி செயல்பட வேண்டும்.

காற்றின் காரணமாக ஏற்படும் புழுதியால் சாலைகளில் பார்வைத்திறன் குறைந்து இருக்கும். அமீரகத்தின் மேற்கு பகுதிகளில் இந்த காற்றின் வேகம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் அதிகமாக இருக்கும். அமீரகத்தில் குளிர்காலம் வருகிற டிசம்பர் 22-ந் தேதி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News